இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளைமுதல் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்குத்தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்திய அணி இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டும்தான், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
இதனால், இந்த நான்காவது டெஸ்டில் மிகச்சிறந்த அணியை தேர்வுசெய்து களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. அகமதாபாத் பிட்ச் சுழலுக்கு சாதகம் எனக் கணிப்பட்டுள்ளது. இதனால், ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களமிறங்கி, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் ஒரு பேட்டரை சேர்க்க ரோஹித் ஷர்மாவும், ராகுல் டிராவிட்டும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிராஜ் நீக்கம்?
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை அவ்வபோதுதான் பயன்படுத்தி வருகிறார். மூன்றாவது டெஸ்டில்கூட முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களை மட்டும்தான் வீசினார். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவே இல்லை. இதனால், இவரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்டரை சேர்த்தால், அது நிச்சயம் உதவிக்கரமாக இருக்கும். ஆகையால் அந்த இடத்தில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவரை களமிறக்க ரோஹித் முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
ராகுலுக்கு முக்கியத்துவம்:
குறிப்பாக, சூர்யகுமார் யாதவை விட்டுவிட்டு கே.எல்.ராகுலை களமிறக்கத்தான் ரோஹித், டிராவிட் ஆகியோர் முடிவு செய்துள்ளார்களாம். கே.எல்.ராகுல் சமீப காலமாகவே சொதப்பி வருகிறார். ஆனால், சூர்யகுமார் யாதவ் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். முதல் போட்டியில் சொதப்பியிருப்பதால், தற்போது கடைசி டெஸ்டில் பொறுப்புடன் விளையாடி தன்னை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், சூர்யகுமார் யாதவ் முரட்டு பார்மில் இருக்கிறார்.
இதனால், பார்ம் அவுட்டில் இருக்கும் கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதைவிட்டுவிட்டு, சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.