15 நவம்பர் 2024
சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு… சுற்றுலா பயணிகள் பலர் பலி… 150 பேரை காணவில்லை!

சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு… சுற்றுலா பயணிகள் பலர் பலி… 150 பேரை காணவில்லை!

சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சீசன் தொடங்கிவிட்டால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் கேங்டாக்கில் இருந்து நாதுலா செல்லும் வழியில் 14வது மைல் ஜவஹர்லால் நேரு சாலையில் இன்று நண்பகல் சுமார் 12.15 மணியளவில் மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிக்கிம் பனிச்சரிவு

இதுபற்றி தகவலறிந்து உடனடியாக மாநில போலீசார், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

இவர்கள் தலைநகர் கேங்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் போலீசார் கூறுகையில், பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இதுவரை 30 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம்.

மீட்பு பணிகள்

அதில் ஒரு பெண் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார். தற்போது கேங்டாக்கில் உள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர். நாதுலா பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான் என்கின்றனர்.

ஆபத்தான பகுதி

இதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இங்கு பயணிகள் வரும் போதே உள்ளூர் மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, 13வது மைல் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றுலா பயணிகள் கட்டாயப்படுத்தி 15வது மைல் வரை அழைத்து செல்ல வைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாகவே மிகப்பெரிய பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது. மீட்பு பணிகள் தாமதமாகி வருவதால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிக்கிம் பனிச்சரிவு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.