சிலிக்கான் வேலி வங்கியின் (Silicon Valley Bank) இங்கிலாந்து பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank).
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலாகிவிட்டது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி 48 மணி நேரத்தில் திவாலானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி போதிய நிதி இல்லாததால் தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை செய்தது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து டெபாசிட்டர்கள் வேகவேகமாக பணத்தை வெளியே எடுத்துக்கொண்டனர்.
மேலும், முதலீட்டாளர்களும் சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து வெளியேறியதால் அதன் பங்கு விலை 60% சரிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் வேலி வங்கி கவிழ்ந்துவிட்டது. பின்னர் சிலிக்கான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடிவிட்டது.
சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்டர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கியை வாங்குவதற்கும் யாரும் இதுவரை முன்வரவில்லை. இதையடுத்து சிலிக்கான் வேலி வங்கியின் சொத்துகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து பிரிவை, இங்கிலாந்தை சேர்ந்த பிரபல எச்எஸ்பிசி வங்கி வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது. 1 பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 99 ரூபாய் மட்டுமே. ஆக, 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து பிரிவை எச்எஸ்பிசி கைப்பற்றியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து பிரிவிடம் 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள டெபாசிட்டுகள் இருக்கின்றன. மேலும் 5.5 பில்லியன் பவுண்ட் கடன்களை வழங்கியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து பிரிவு உடனடியாக எச்எஸ்பிசி வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.